வேலையிழக்கும் 36 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணியாளர்கள்!!! மற்ற விமான நிறுவனங்களின் நிலைமை!!!
- IndiaGlitz, [Friday,April 03 2020]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன. இதனால் விமான நிறுவனங்கள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்திருக்கும் நிலையில் சில நிறுவனங்கள் அதிரடியாக தங்களது பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்வதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்தில் IAG க்கு சொந்தமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது ஊழியர்களில் 36 ஆயிரம் பேர்களை பணியிடை நீக்கம் செய்யவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பிரிட்டனில் இரண்டாவது பெரிய விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்தில் இருந்து எந்த விமானங்களையும் இயக்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகிய நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஷ் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறது. இதனால் நிறுவனத்தில் வேலைபார்க்கும் 80% பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் கொரோனா பாதிப்பினால் வேலையிழக்கும் நபர்களுக்கு வழங்கும் நிவாரண நிதியின் மூலம் குறைந்தது 80% வரை சம்பளத்தை பெற்றுவிடலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதே போல இந்தியா விமான நிறுவனங்களாக Spicejet, GoAir நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக குறைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிறுவன ஊழியர்களின் மார்ச் மாதச் சம்பளத்தில் மட்டும் 30% வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகக்காக விமான சேவை நிறுத்தத்தை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது. உலகம் முழுவதும் பல விமான நிறுவனங்கள் தற்போது இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துவருவதால் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.