35 லட்சம் பேருக்கு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது... காரணம் என்ன?

  • IndiaGlitz, [Wednesday,December 29 2021]

கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைகடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என சட்டச்சபை தேர்தலின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 5 சவரன் வரை தங்க நகைகள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றவர்களுக்கு அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என விளக்கம் கொடுத்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நகைக்கடன் தள்ளுபடி பெறுவோர்களுக்கான தகுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதன்படி 48,84,726 பேர் 5 சவரன் தங்க நகைகளை வைத்து கடன் வாங்கியிருப்பதாக கூட்டுறவுத் துறை தகவல் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் உள்ள 35,37,693 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று கூட்டுறவுத்துறை தற்போது திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

அதில், 5 சவரன் தங்கநகைக்குமேல் ஒரு கிராம் அதிகமான அளவில் நகைகளை வைத்து கடன் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு கடன்தள்ளுபடி கிடையாது.

அரசு பணியில் உள்ளவர்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணியில் உள்ளவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

மேலும் இதுகுறித்த பட்டியல் அனைத்தும் வரும் 31 ஆம் தேதிக்குள் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் உரிய பயனாளிகளுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூட்டுறவுத்துறை சார்பாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.