கொரோனா அச்சத்தால் பிளஸ் 2 தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்கள்: மறுதேர்வு வைக்கப்படுமா?

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று வெளியான செய்தியை பார்த்தோம். ஆனால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடியும் நிலையில் இருப்பதால் அந்த முழுமையாக முடித்துவிட தமிழக அரசு முடிவு செய்தது.

இதனை அடுத்து நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஆனால் இந்தத் தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பயம் காரணமாக கடைசி தேர்வில் மாணவர்கள் பலர் பங்கேற்கவில்லை என்றும் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததாலும், சில இடங்களில் போக்குவரத்து முடங்கியதாலும் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதும் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவர்களுக்காக மறுதேர்வு வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.