சென்னையில் பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு!
- IndiaGlitz, [Wednesday,June 30 2021]
கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் இணைநோயான பூஞ்சை தொற்றுகளால் இந்தியா முழுக்கவே தற்போது கடும் பீதி எற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் 32 வயதான ஒரு நபருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த மார்ச் முதல் இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அடுத்து வெள்ளை, மஞ்சள் தற்போது பச்சை என தொடர்ந்து பூஞ்சைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மனிதர்களைத் தாக்கி வருகிறது. இதனால் சிலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் 34 வயதான நபர் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து பஞ்சாப்பில் இதேபோல இரு நபர்களுக்கு பச்சை பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்றுடன் சேர்ந்து பச்சை பூஞ்சை நோய்த்தொற்றும் கண்டறியப்பட்டது. தற்போது தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது.
மேலும் கருப்பு பூஞ்சை நோய் போல இல்லாமல் பச்சை பூஞ்சை நோய்த் தொற்றை எளிய ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொள்ளமுடியும் என்றும் ஆனால் உரிய நேரத்தில் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.