உத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் – அடித்தது லாட்டரி!!!
- IndiaGlitz, [Saturday,February 22 2020]
உத்திர பிரதேச மலைகளில் 3000 டன் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தச் செய்தி உத்திர பிரதேசத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே லாட்டரி அடித்தது மாதிரி உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரப் பிரதேச மாநிலம், சோனா பத்ராவில் உள்ள ஹார்டி மற்றும் சோனா பகதி பகுதிகளில் இரண்டு பெரிய தங்கத் தொகுதிகள் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். இந்தியப் புவியியல் மற்றும் உத்திரபிரதேச புவியியல் ஆய்வாளர்களும் சுரங்கத் துறை அதிகாரிகளும் இணைந்து சோனா பத்ரா பகுதி மலைகளில் கனிமங்களுக்கான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆய்வுகளில் சோனா பகதியில் மட்டும் 2,943 டன் தங்கம் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஹார்தி பகுதியில் சுமார் 646 கிலோ தங்கம் கிடைக்கலாம் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து சோனாபத்ராவின் சுரங்கத்துறை அதிகாரி கே.கே. ராஜ் “ஆய்வுகள் முழுவதுமாக முடிந்த பிறகு அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப் படும், சுரங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் படும்” எனத் தெரிவித்துள்ளார்.
கணிக்கப் படும் அளவுகள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் தங்க இருப்பு 5 மடங்காக உயர வாய்ப்பு இருக்கிறது. மேலும், உலகில் அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது. நான்கு மாநிலங்களின் எல்லைகளை இணைக்கும் விதமாக, சோனா பத்ராவின் மலைகள் அமைந்திருக்கின்றன. இந்த மலைகளில் பழங்குடி மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, சோனா பத்ரா மலைகளில் கனிமங்கள் இருப்பதைக் குறித்து 12 வருடங்களாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. சோனாபத்ரா மற்றும் லலித்பூர் போன்ற பகுதிகளில் ஆய்வுகள் நடந்தது.
தற்போது சோனாபத்ராவின் மலைகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே தங்கம் இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும் ஒரு சில கனிமங்களும் கிடைக்கலாம் என எதிர்ப் பார்க்கப் படுகிறது. இன்னும் இந்தப் பகுதிகளில் சுரங்கங்கள் அமைக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதன் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் பட்டவுடன் இதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த ஆய்வுக்குழுவின் இயக்குநரான சக்ரபாணி உத்திரபிரதேசத்தின் முதல் தங்கத் தொகுதியாக சோனாபத்ரா விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் வைரம் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.