3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு, செல்போனும் சுவிட்ச் ஆப்: பெரும் பரபரப்பு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுமார் 3000 பேர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும் அவர்கள் தங்களுடைய வீடுகளையும் காலி செய்துவிட்டு செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும் கர்நாடக மாநில அமைச்சர் அசோக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. சுனாமி போல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேர் திடீரென தலைமறைவாகி விட்டதாக கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பெங்களூரில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. இதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சுமார் 3000 பேர் தலைமறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ளவர்கள் தங்களது வீடுகளையும் காலி செய்து விட்டதாகவும் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளதால் அவர்களை தேடிக் கண்டுபிடிப்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் போலீசார் மூலம் அவர்களை தேடி கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறோம்.

கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் தயவு செய்து தலைமறைவாக வேண்டாம். மருத்துவமனைக்கு வந்து தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். தலைமறைவாவது சரியான நடவடிக்கை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள 3000 பேர்களால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா பாதிப்பு பரவும் ஆபத்து இருப்பதாகவும் எனவே கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் யாரும் தயவு செய்து செல்போனை துண்டிக்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக இரண்டு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.