காமக்கொடூரன் கையில் மாட்டிய 300 குழந்தைகள்!!! ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த அவலம்!!!
- IndiaGlitz, [Friday,July 10 2020]
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார். பிராங்கோயில் கமிலி அபல்லோ என்ற பெயருடைய 65 வயது முதியவர் குழந்தைகளிடம் ஆசையாக பேசி அவர்களை மயக்கி தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஜகர்த்தாவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் அபல்லாவை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து நூற்றுக் கணக்கான சீடிக்களையும் பறிமுதல் செய்து இருக்கின்றனர்.
குழந்தைகளிடம் வலிய பேசி அவர்களை அழைத்துச் சென்று தகாத செயலில் ஈடுபட்டதாகவும் அவருடய ஆசைக்கு இணங்காத குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தியதாகவும் தற்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய தகாத செயலால் சில குழந்தைகள் கொலை கூட செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் தற்போது அந்நாட்டு காவல் துறையினர் வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும் இந்த முதியவர் பல முறை சுற்றுலா விசாவை வைத்துக்கொண்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணப்பட்டு இருக்கிறார். அந்த இடங்களிலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்று இருக்குமா என்ற சந்தேகமும் எழுப்பப் பட்டு இருக்கிறது.
குழந்தைகளிடம் நல்லவராக நடித்து இப்படி தகாத செயலில் ஈடுபடும் இந்த முதியவர் குற்றம் வெளியே தெரியாமல் இருக்க குழந்தைகளுக்கு பணத்தையும் கொடுத்து இருக்கிறார். 25 ஆயிரம் ரூபியா முதல் 1 மில்லியன் ரூபியா வரையிலும் குழந்தைகளுக்கு கொடுத்ததாக விசாரணையில் முதியவர் ஒப்புக்கொண்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.1250-1500 வரை. டாலரில் 17-20 டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் 10 முதல் 17 வயதுடைய சிறுமிகளையே இவர் தேர்ந்தெடுத்தாகவும் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. இதுவரை 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப் பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆசைக்கு இணங்காத குழந்தைகளை அவர் பல நேரங்களில் அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல குழந்தைகள் உயிரிழந்து இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த குற்றவழக்கிற்கு அந்நாட்டு சட்டப்படி மரணத் தண்டனை கிடைக்கும் என்று சிலர் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்த வழக்கு குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலீஸார் அவரை கைது செய்யும் போது அறையில் இருந்து 2 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.