3 ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசின் அவசர சட்டத்தால் பரபரப்பு

சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவர் சைமன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இதுபோன்றவைகளுக்கு அவசர சட்டம் இயற்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சற்றுமுன் கொரோனா உள்பட தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரைதண்டனை வழங்கும் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இதமிழ்நாடு அரசினால்‌, அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை கண்ணியமான முறையில்‌ அடக்கம்‌ / தகனம்‌ செய்வதைத்‌ தடுக்கும்‌ செயலையும்‌, தடுக்க முயற்சிப்பதையும்‌ தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும்‌ நோக்கில்‌ மாண்புமிகு அம்மாவின்‌ அரசு அவசரச்‌ சட்டம்‌ ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த அவசரச்‌ சட்டத்தின்படி, அரசால்‌ அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின்‌ உடலை கண்ணியமான முறையில்‌ அடக்கம்‌ / தகனம்‌ செய்வதைத்‌ தடுப்பதும்‌, தடுக்க முயற்சிப்பதும்‌ குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில்‌ ஈடுபடுபவர்கள்‌ மீது தமிழ்நாடு பொது சுகாதாரச்‌ சட்டம்‌, 1939, பிரிவு-74ன்படி அபராதம்‌ உட்பட குறைந்தபட்சமாக ஒராண்டு சிறைத்‌ தண்டனையும்‌ அதிகபட்சமாக மூன்றாண்டுகள்‌ வரை சிறை தண்டனையும்‌ விதிக்கப்படும்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.