ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த 3 வயது குழந்தை: அதிர்ச்சியில் தாய்

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் 3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத் என்ற பகுதியில் உள்ள ஒரு தம்பதியின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த குழந்தையை மார்போடு அணைத்தபடி அந்த குழந்தையை தாய் அழுது கொண்டே மருத்துவமனைக்கு தூக்கி ஓடினார். இருப்பினும் அவர் மருத்துவமனையை அடையும் முன்னரே குழந்தை இறந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் கிடைக்காததால்தான் அந்த குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து உரிய விசாரணை செய்து, ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் 3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாத இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.