தொடர்கதையாகும் பெற்றோர்களின் அலட்சியம்: இன்றும் ஒரு குழந்தை பலி!
- IndiaGlitz, [Wednesday,October 30 2019]
ஒரு குழந்தையை 5 வயது வரை வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய கலை ஆகும். ஒரு குழந்தையை பிரசவிக்க பத்து மாதங்கள் மட்டும் போதும். ஆனால் அந்த குழந்தையை பாதுகாப்புடன் வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய சவால் என்பதை பல பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
நேற்று பெற்றோர்களின் அலட்சியத்தால் சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தையே துயரக்கடலில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நேற்றே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தம்பதியினரின் 3 வயது பெண் குழந்தை பாத்ரூம் தொட்டியில் தவறி விழுந்து பலியான சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றும் மூன்று வயது குழந்தை ஒன்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தை பார்க்கும்போது பெற்றோர்களை அலட்சியம் தொடர்கதையாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் பண்டரகோட்டையைச் சேர்ந்த மகாராஜன் - பிரியா தம்பதியின் 3 வயது மகள் பவழவேணி என்ற குழந்தை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விளையாட சென்றுள்ளது. அப்போது குழந்தை பவழவேணி வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்து பலியாகியுள்ளது.
இதில் ஒரு கொடுமை என்னவெனில் குழந்தை பலியானதை சில மணி நேரமாக யாரும் கவனிக்கவில்லை என்பதுதான். குழந்தையின் தாய் குழந்தையை தேடியபோதுதான் அந்த குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.