கொரோனா மிஞ்சியதால் 3 வாரங்களுக்கு விடுமுறை… மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்!!!
- IndiaGlitz, [Monday,October 12 2020]
கர்நாடக மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார். கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் முதல் கர்நாடகாவில் திறக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து பள்ளிகளுக்கு வந்து பணியைத் தொடருமாறு இந்த மாதத்தின் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றத் தொடங்கினர்.
ஆனால் ஆசிரியர்களின் தொடர் வருகையால் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து 3 வாரங்கள் வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது இல்லை என்றும், வித்யாகாம திட்டத்தில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை நிறுத்தி வைப்பது என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஏராளமான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தேன்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) முதல் வருகிற 30 ஆம் தேதி வரை 3 வாரம் விடுமுறை அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான முறையான உத்தரவை பிறப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் எனது அன்புக்குரிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தசரா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.