3 வேளை இலவச உணவு...! அதிரடியாக துவங்கி வைத்த அமைச்சர்....!
- IndiaGlitz, [Tuesday,May 11 2021]
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் 2-ஆம் அலை வேகமாக பரவி சூழலில், நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 28,978 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 232 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சுமார் 20,904 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கை 15,880-ஐ கடந்துள்ளது.
மாநிலம் முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை - 14,09,237
இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை -12,40,968
சென்னையில் ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்கள் - 7,149
பலியானவர்கள் எண்ணிக்கை - 67
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக, 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு துவங்கி வைத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இரண்டு வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், 24 மணி நேரம் உணவு வழங்கும் திட்டத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று துவங்கி வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீர்மானிக்க ஆளும்கட்சி சார்பாக அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.