இந்தியாவுக்கே முன்னோடியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்… மூன்று மாநிலம் பின்பற்றும் முக்கிய முடிவு!!!
- IndiaGlitz, [Monday,October 26 2020]
கொரோனா பேரிடர் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு நமது நாடும், நமது மாநிலமும் விதிவிலக்கு அல்ல. அந்த வகையில் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒரு தலைவரின் ஆளுமை திறன் என்பது இக்கட்டான, எதிர்பாராத சூழ்நிலைகளில் எவ்வாறு மக்கள் நலனை கருத்தில் கொணடு ஆட்சி செய்வது என்பதை பொருத்தே அமையும். அவ்வாறு தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தனது ஆளுமை திறனால் மிகவும் சிறப்பான முறையில் எதிர்கொண்டு மாநிலத்தை வழிநடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 சதவீதத்தை எட்டியுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரமாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டவுடன் அனைத்து தமிழக மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது வரலாறு காணாத அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை எத்தனையோ கொடிய நோய் சார்ந்த பேரிடர்கள் வந்திருந்தாலும் எந்த ஒரு மாநிலமும் அதற்கான தடுப்பு மருந்தை அதன் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கியது கிடையாது. முதல் முறையாக இதைப்போன்ற ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த முடிவு தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வைக்கு சான்றாகவே பார்க்கப் படுகிறது.
இதைப் பின்பற்றி பிற மாநிலங்களான மத்திய பிரதேசம், புதுச்சேரி, கர்நாடகம் ஆகியவையும் இதைப் போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்வு தமிழகத்தை நாட்டிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக பறைச்சாற்ற உதவும். மேலும் இந்த அறிவிப்பால் பலதரப்பட்ட மக்களும் பயனடைவர் என்பதால் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது.