ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல். 2 இந்திய வீரர்கள் வீரமரணம்
- IndiaGlitz, [Wednesday,November 30 2016]
இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் இரண்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு அருகே நக்ரோடா என்ற பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முகாம் மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவமும் திருப்பி தாக்கியது.
எனினும் இதுவரை எந்த தீவிரவாதியும் பிடிபடவில்லை என்றும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்து இன்னும் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலால் அந்த பகுதியே பதட்டம் அடைந்து உள்ளதால் நக்ரோடா மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் இயங்கும் பள்ளிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் விடுமுறை விட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளை சமாளிக்கும் வகையில், ராணுவத்தினர் தொடர் சண்டையில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து விதமான பொதுமக்கள் நடமாட்டமும் முடக்கப்பட்டுள்ளது.