பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால்… 3 காவலர்கள் பணியிடை மாற்றமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கடலூரில் இருந்து 3 காவலர்கள் கள்ளக்குறிச்சிக்கு பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரும் கறுப்பு நிற சட்டை அணிந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதே இந்த பணியிடை மாற்றத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பொது வெளியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தின் போக்குவரத்து முதல்நிலைக் காவலராக பணியாற்றி வந்தவர் எஸ்.ரஞ்சித், கடலூர் புதுநகர் கவால் நிலைய காவலர் டி.ரங்கராஜன், திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய காவல் அதிகாரி ஜி.அசோக் ஆகியோர் கறுப்பு நிறச் சட்டை அணிந்து அண்மையில் கடலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதை புகைப்படமாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் தங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படத்தால் 3 பேரும் பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த 6 ஆம் தேதி 3 பேரையும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பணியிட மாற்றப் பின்னணியில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி விவகாரம் இருப்பதாக காவல் துறையில் பணியாற்றும் பலரும் தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தவில்லை. பணி நேரத்திலும் இது நடக்கவில்லை. பின்பு எந்த காரணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டது எனப் பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், “பெரியாரும் மரியாதைக்கு உரியவரே. எனவே அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காகவோ, மரியாதை செலுத்தியதற்காகவோ அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. அதை தாண்டி வேறு சில செயல்களில் ஈடுபட்டதாலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்” என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் இந்த விளக்கத்தை ஒப்புக்கொள்ளாத பலரும் பணியிடமாற்றம் விவகாரத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகின்றனர். மேலும் காவல் துறையின் இச்செயலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments