தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேருக்கு மயக்கம்… அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Saturday,February 13 2021]
அவசரகால அடிப்படையில் கோவேக்ஷின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தற்போது இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக் கொண்ட 3 சுகாதாரப் பணியாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து மயக்கம் அடைந்தவர்களை அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தித்ததாகவும் தற்போது அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியானது 2 லட்சத்து 11 ஆயிரத்து 848 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் டோஸ் வழங்கும் நடைமுறை முதன் முதலாக இன்று துவங்கப்பட்டு இருக்கிறது. அதில் முதற்கட்டமாக 3,126 சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது தஞ்சையில் 200 சுகாதாரப் பணியாளர்கள் 2 ஆவது டோஸ் மருந்தை செலுத்திக் கொண்டு உள்ளனர். இப்படி செலுத்திக் கொண்ட 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.