புலிட்சர் விருதைத் தட்டிச்செல்லும் 3 இந்திய புகைப்பட கலைஞர்கள்!!! சாதித்தது என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீரின் சிறப்பு அஸ்தஸ்து நீக்கப்பட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை படமெடுத்த 3 இந்திய புகைப்பட கலைஞர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. பத்திரிக்கைத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் இந்த புலிட்சர் விருது ஆஸ்கருக்கு இணையாக மதிக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
35A விதிமுறையின் படி ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிவந்த 370 ஆவது சட்டப்பிரிவின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காஷ்மீர் மக்களுக்கு பேரிடியாக அமைந்தது எனவும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களைத் தடுப்பதற்காக மத்திய அரசு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களான மெஹபூபா முக்தி, உமர் அப்துல்லா போன்றவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. அதோடு இணைய வசதி, தொலைபேசி போன்ற அத்யாவசிய தொலைத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக முடக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது. அத்தருணத்தில் மக்கள் ஒடுக்கப்பட்டதையும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதையும் குறித்த பல்வேறு புகைப்படங்கள் ஊடங்களில் வெளியானது.
அமெரிக்காவை சேர்ந்த ஊடக நிறுவனமான “அசோசியேட் பிரஸ்” நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்களான தர் யாசின், முக்தர் கான், சன்னி ஆனந்த் போன்றோர் அந்நாட்களில் கடுயைமான ராணுவக் கட்டுப்பாடுகளையும் மீறி காஷ்மீரின் கோர முகத்தை தங்களது புகைப்படக் கருவிகளில் பதிவு செய்தனர். இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், இராணுவ வீரரை கண்ணீரோடு நிமிர்ந்து பார்க்கும் சிறுமி, வெறிச்சோடிய சாலைகள், குண்டு துளைக்கப்பட்ட வீடுகள், அரசுக்கு எதிராக மக்கள் எழுப்பிய போராட்டம் எனப் பல புகைப்படங்கள் இவர்களால் எடுக்கப்பட்டது. தற்போது இந்தப் புகைப்படங்களுக்குத்தான் உலகின் மிகப்பெரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி தர் யாசின் கூறும்போது, “இது வெறுமனே புகைப்படங்கள் மட்டுமல்ல, எங்களின் வரலாறு” என்று தெரிவித்து இருக்கிறார். விருதுபெற்ற தர் யாசின், முக்தர் கான் இருவரும் ஸ்ரீநகர் பகுதியைச் சார்ந்தவர்கள். சன்னி ஆனந்த் ஜம்மு பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயரிய விருதான புலிட்சர் விருதை இதுவரை 11 இந்தியர்கள் பெற்றிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களில் 2 பேர் பெண்கள் என்பதும் சிறப்புக்குரியது. இந்த ஆண்டு 2020 க்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்ட 3 இந்திய புகைப்படக் கலைஞர்களுக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆன ராகுல் காந்தி மற்றும் காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். விருதுகளோடு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிட்சர் விருதானது அமெரிக்காவை சேர்ந்த ஜோசப் புலிட்சர் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையளரான இவர் உள்நாட்டு கலவரத்தின் காரணமாக அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கு தி நியூயார்க் வேர்ல்ட்டு என்ற பிரபல பத்திரிக்கையும் திறம்பட நடத்தினார். பத்திரிக்கை துறையில் சாதனை புரியும் கலைஞர்களை சிறப்பிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதே இந்த புலிட்சர் விருது. ஆரம்பத்தில் அமெரிக்கா, கொலம்பியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களே இந்த விருதுகளை தட்டிச் சென்றனர். பின்னர் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி, புகைப்படக் கலைஞர்கள், இசை வல்லுநர்கள், இணைய ஊடகம் போன்ற துறைகளுக்கும் இந்த விருது விரிவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments