ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம்சிங்கம்… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய அணி ஜோகனஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இந்தப் போட்டியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் “லார்ட்-ஷர்துல்“ என்று ஹேஷ்டேக் பதிவிட்டு டிரெண்டாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஜோகன்ஸ்பர்க் களத்தில் தோல்வியே அடையாத இந்திய அணி முதல்முறையாகத் தோற்றுவிடுமோ என்ற பதற்றம் நேற்று ஏற்பட்டு இருந்தது. அந்தப் பதற்றத்தை எந்தவித ஆக்ரோஷமும் இல்லாமல் ஷர்துல் தாகூர் சரிசெய்த விதம் பல மூத்த வீரர்களையும் தற்போது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

2 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களின் வேகப்பந்து வீச்சில் சிக்கி சீட்டுக்கட்டுகளைப் போல தங்களது விக்கெட்டுகளை சரியவிட்டு ஒருவழியாக 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதில் கே.எல்.ராகுல் அதிகப்பட்சமாக 50 ரன்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 35 ரன்களையும் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட்டு இழப்பிற்கு 35 ரன்களை எடுத்திருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் துவங்கிய தென்னாப்பிரிக்க அணியை முதல் டெஸ்ட் போட்டியைப் போலவே விக்கெட் இழக்க செய்துவிடலாம் என்று இந்திய அணி கருதிக்கொண்டிருந்தது.

ஆனால் நேற்று களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் டீன் எல்மார் மற்றும் கீகன் பீட்டர்சன் இருவரும் இந்திய அணி வீரர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பை கலைக்கவே முடியாமல் மூத்த வீரர்களான முகமது ஷமி மற்றும் பும்ரா இருவரும் தவித்த நிலையில்தான் இளம்வீரர் ஷர்துல் தாகூர் களமிறக்கப்பட்டார்.

களமிறங்கிய ஷர்துல் தாகூர் முதல் ஓவரிலேயே டீன் எல்மாருக்கு ஒரு அவுட்சைட் ஆஃப் பந்துபோட்டு பந்தை அடிக்கத் தூண்டினார். இதனால் 120 ரன்களுக்கு வெறும் 28 ரன்களை எடுத்து நிதானமாக விளையாடிவந்த டீன் தனது விக்கெட்டை இழக்க வேண்டிவந்தது. அதேபோல இன்னொரு வீரரான பீட்டர்சனுக்கும் Wideside இல் பந்துவீச அது எட்சாகி விக்கெட் ஆனது.

இதேபோல அசராமல் விளையாடிவந்த தென்னாப்பிரிக்க வீரர்களை நேற்று ஷர்துல் தனது உணர்ச்சிப்பூர்வமான பந்துவீச்சில் சிக்கவைத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின்போது ரசிகர்களைத் தனது பந்துவீச்சால் கட்டிப்போடிருந்த ஷர்துல் தற்போது ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் “லார்ட்-ஷர்துல்“ என்று ஹேஷ்டேக் பதிவிட்டு அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணி 2 ஆவது நாள் ஆட்டத்தில் 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதையடுத்து 2 ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஹானே 35 ரன்களுடனும் புஜாரா 11 ரன்களுடன் தற்போது களத்தில் விளையாடி வருகின்றனர்.