ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு; கிடுக்குப்பிடிக் காட்டும் சிபிஐ, அமலாக்கத்துறை!!!
- IndiaGlitz, [Monday,October 05 2020]
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை மீதான மேல்முறையீட்டு வழக்குகள் இன்றுமுதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீதான விசாரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018 மார்ச் 19 ஆம் தேதி அமலாக்கத்துறையும் சிபிஐயும் தனித்தனியாக பல்வேறு மேல்முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்து இருந்தன. இந்த வழக்கை தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் தீவிர விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற விவாதங்களும் தற்போது ஊடகங்களில் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டன.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வுபெற இருக்கிறார். இதனால் வழக்கு தீவிரம் அடைந்து மிக விரைவில் முடிவுகள் எட்டப்படும் எனவும் நம்பப்படுகிறது. இதற்கு முன்னதாக சிபிஐ தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. தற்போது ஆ.ராசா போன்றோர் இந்த மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தைக் கூறுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
மேலும் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி விரைவில் ஓய்வுபெற இருப்பதால் வழக்கு விசாரணையைத் துரித்தப்படுத்துமாறு அமலாக்கத்துறையும் சிபிஐயும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனுத்தாக்கல் செய்து இருந்தது. அந்த மனுவை கடந்த 10 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் இந்த வழக்கை குறித்து நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கருத்துகளை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் விடுதலை செய்யப்பட்டோருக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கை அவசர வழக்காக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விசாரிப்பதாக உறுதி அளித்தது. அந்த வகையில் இன்று 2ஜி அலைக்கற்றை வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணை தமிழகத்தின் அரசியல் மட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கருத்துகள் கூறப்படுகின்றன. இது அதிமுகவிற்கு சாதகமாக அமையுமா என்ற ரீதியிலும் சில எதிர்ப்பார்ப்புகள் கூடியிருக்கிறது.