2ஜி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

கடந்த 2010ஆம் ஆண்டு 2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியதை இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட ஒருசிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அனைத்து விசாரணைகளும் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அக்டோபர் 25ஆம் தேதி அதாவது இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே சிபிஐ நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7ஆம் தேதி வழங்கப்படும் என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.

திமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்று கருதப்படும் இந்த தீர்ப்பு வெளியாகும் அதே நவம்பர் 7ஆம் தேதி தான் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சி பயணத்தை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.