சிம்புவின் 'வாலு' படத்திற்கு இடைக்கால தடை. நீதிமன்றம் உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,July 08 2015]
மூன்று வருடங்களுக்கு பின்னர் வரும் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸாகும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட 'வாலு' திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிம்பு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்த வாலு' திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் பலவித காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த படத்தை தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட அனைத்து முயற்சிகளையும் எடுத்து ஜூலை 17 ரிலீஸ் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் 'வாலு' படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அந்த மனுவில் வாலு' படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஒப்பந்தத்தை மீறி வேறு நிறுவனம் மூலமாக இப்படத்தை வெளியிட முயற்சிப்பதாகவும், எனவே 'வாலு' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது 'வாலு' படத்தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரப்பட்டதால், வழக்கை வரும் 13ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. அதுவரை வாலு' படம் வெளியிட இடைக்கால தடைவிதித்ததோடு, தற்போதைய நிலையிலேயே நீடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிபதியின் இந்த உத்தரவால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.