இசைக்காக 288 நாட்கள் பட்டிணிப்போராட்டம்!!! கோரிக்கை நிறைவேறாமலே உயிர்பிரிந்த அவலம்!!!
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
துருக்கியில் ஒரு பெண் இசைக்கலைஞர் 288 நாட்கள் பட்டிணிப் போராட்டத்திற்குப் பின்பு நேற்று உயிரிழந்துள்ளார். 28 வயதான ஹெலின் போலக் என்பவர் ‘க்ரூப் யோரம்’ என்ற இசைக்குழுவை நடத்தி வந்தார். இந்த இசைக்குழு துருக்கியின் நாட்டுப்புறப் பாடல்களை இணைத்து தனது கலையை வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத் தக்கது. மேலும், க்ரூம் யோரம் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் விதமாகவும் பலக்கருத்துக்களை தங்களது பாடல்களில் வெளிப்படுத்தி வந்தது. இத்தகைய செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு க்ரூப் யோரம் இசைக்குழுவுக்குத் தடை விதித்தது.
மேலும், அரசிற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்திய குற்றத்திற்காக அந்தக்குழுவில் பலர் கைதும் செய்யப்பட்டனர். ஹெலின் போலக் தனது இசைக்குழுவிற்கு போடப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட தனது குழு உறுப்பினர்களை வெளியே விடவேண்டும் எனறும் கோரிக்கை வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார். அரசின் கவனத்திற்கு போராட்டம் குறித்த தகவல் கடந்த மாதம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், துருக்கி அரசு ஹெலின் போலக் உண்ணாவிரதத்தை நிறுத்தாமல் எந்த பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவித்து விட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி உடல்நிலை மிகமோசமானதால் ஹெலன் போலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்து சிகிச்சைக்கு மறுத்துவிட்டார். அதனால் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இசைக்காகவும் தனது குழு உறுப்பினர்களுக்காகவும் 288 நாட்களாக பட்டிணி இருந்து உயிர் நீத்துள்ள பெண்இசைக் கலைஞருக்கு தற்போது துருக்கி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 288 நாட்களும் தொடர்ந்து பட்டிணிப் போராட்டம் நடத்திவந்த அவரது அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு தற்போது கலையுலகமும் வியந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.