அசத்தும் சிங்கப்பெண்… போர் பகுதியில் இருந்து 800 இந்திய மாணவர்களை மீட்ட 24 வயது பெண் பைலட்!

  • IndiaGlitz, [Monday,March 14 2022]

கடும் போர் நிகழும் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 800 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் பைலட். இவருடைய அசாத்தியமான திறமையைப் பார்த்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கையைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தங்கியிருந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்களின் நிலைமை கடும் கேள்விக்குறியானது. மேலும் கடந்த 24 ஆம் தேதியே அந்நாட்டு விமான நிலையங்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக இந்தியா கடும் சிக்கலைச் சந்தித்துவந்தது.

இந்த நிலையில் ஆப்ரேஷன் கங்கா எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது இந்திய மாணவர்கள் படிப்படியாக அங்கிருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொல்கத்தாவை சேர்ந்த மஹாஸ்வேதா சக்கரவர்த்தி என்பவர் ஏர்பஸ் ஏ320 எனும் விமானம் மூலம் இதுவரை 800 மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு வந்துள்ளார்.

இதற்காக மஹாஸ்வேதா கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 6 விமானங்களை இயக்கி இருக்கிறர். போலந்து, ஹங்கேரி மற்றும் இஸ்தான் புல் பகுதிகளில் இருந்து இந்திய மாணவர்களை அவர் பத்திரமாக மீட்டு வந்த தருணங்களைப் பார்த்து பல மூத்த விமானிகளும் அவருக்குப் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தில் உள்ள இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உதான் அகாடமியில் பயின்ற மஹாஸ்வேதா சக்கரவர்த்தி கடந்த 4 ஆண்டுகளாக தனியார் விமான நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் கோவிட் காலக்கட்டத்தில் வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் தற்போது இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்களுடன் இணைந்து உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டுவரும் திட்டத்திலும் மஹாஸ்வேதா சக்கரவர்த்தி பங்காற்றியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.