மேலும் ஒரு துயரச்சம்பவம்!!! லாரி விபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய 23 தொழிலாளிகள் பலி!!!
- IndiaGlitz, [Saturday,May 16 2020]
உத்திரப்பிரதே மாநிலத்தைச் சார்ந்த அவுரியா மாவட்டத்தில் லாரியில் பயணம் செய்த 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்து ஒன்றில் உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவுரியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரிமீது வேகமாக வந்த வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட அதிகாரி அபிஷேக் சிங் தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஊரடங்கு காரணமாக கூலித் தொழிலாளிகள் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து சொந்த ஊருக்குத் திரும்பி செல்லும் அபாயம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லாக் டவுன் பிறப்பித்த மார்ச் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்து, தற்போது அதிகரித்துக் கொண்டே வருதாகவும் கூறப்படுகிறது. இந்நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை சிறப்பு ரயில் போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது. அன்று ஒரே நாளில் சுமார் 1 மில்லியன் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் போக்குவரத்து இல்லாததால் நடை பயணமாகவும், கிடைக்கும் வண்டிகளில் பயணம் செய்தும் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் நிலைமை இருந்து வருகிறது. நெடுந்தூரம் கால் நடையாக நடந்து வருவதால் பலர் களைப்பு மற்றும் உடல் நலக் கோளாறால் இறந்து போகும் அபயாமும் தொடர்கிறது. சொந்த கிராமங்களுக்கு திரும்பி செல்லாமல் அதே இடத்தில் தங்கி வாழ்வதற்கான பொருளாதார வசதி இல்லாததால் தொழிலாளர்கள் இத்தகைய அபாய முடிவினை எடுப்பதாகவும் கூறப்படுகிறது. மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வருவதாகக் கூறப்பட்டாலும் தொடர்ந்து இந்திய சாலைகளில் பயணிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மகாரஷ்டிராவில் நடை பயணமாக சொந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் களைப்பு காரணமாக ரயில் ட்ராக்கில் படுத்து உறங்கினர். எதிர்பாராத விதமாக அங்கு வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே 16 தொழிலாளர்கள் இறந்து போன கோரச் சம்பவம் கடந்த வாரத்தில் நடந்தது. அதுமட்டுமல்லாது உத்திரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் நடந்த சாலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிட்டது. மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது உத்திரப் பிரேசத்தின் அவுரியா மாவட்டத்தில் 23 தொழிலாளர்களின் உயிரிழப்பு கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சாலை விபத்தில் இறந்த தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட் மற்றும் வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.