கல்விக்கு வயது தடையா? 24 டிகிரிக்கு பிறகு 82 வயதில் முதியவர் செய்த அசத்தல் காரியம்!

  • IndiaGlitz, [Friday,December 24 2021]

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 82 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய 25 ஆவது பட்டப்படிப்பிற்கான விண்ணப்பத்தினை அளித்துள்ளார். இதுவரை 24 பட்டப்படிப்புகளை முடித்த அவரைப் பார்த்து பல்கலைக்கழக துணைவேர்ந்தர் வியந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

படிப்பதற்கு வயது ஒரு தடையேயில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த குருமூர்த்தி. அரசு பணியில் ஓய்வுப்பெற்ற இவர் சிறுவயதில் இருந்தே படிப்பின்மீது தீராக் காதல் கொண்டிருந்தார். இதனால் சிறுவயதில் கிடைக்காத கல்வியை இவர் வயது வந்த பிறகு தொலைத்தூர கல்வி நிலையத்தில் இணைந்து தொடர்ந்து படித்து வந்துள்ளார்.

அந்த வகையில் பணியில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு முன்பு 12 பட்டப்படிப்புகளை முடித்திருந்த குருமூர்த்தி ஓய்வுப்பெற்றப் பிறகும் அதற்கு விடுப்பு வழங்காமல் தொடர்ந்து இன்னும் 12 பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார். இதனால் 24 பட்டங்களைப் பெற்றுள்ள அவர் தற்போது 25 ஆவது பட்டப்படிப்பிற்கான விண்ணப்பத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வழங்கியுள்ளார்.

இவரைப் பார்த்து வியந்துபோன அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் அதிகாரிகள், முதியவர் குருமூர்த்திக்கு சால்வை அணிந்து மரியாதை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பலருக்கும் படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.