விஷசாராயம் அருந்தி பலர் உயிரிழப்பு… தீபாவளியில் நடந்த சோகம்!
- IndiaGlitz, [Friday,November 05 2021]
பீகார் மாநிலத்தில் விஷசாராயம் அருந்தி 24 பேர் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த இரு மாதங்களில் இது 3 ஆவது நிகழ்வு என்றும் பகீர் தகவல் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2016 முதல் அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி இருக்கிறார். இதன்படி மது தயாரித்தல், விற்பனை செய்தல், ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்வது, அருந்துவது போன்றவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில் பீகார் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாராயம் காய்ச்சுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து விட்டது எனப் புகார் கூறப்படுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஆங்காங்கே எரிசாராயங்கள் விற்பனைச் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பான் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 24 பேர் விஷசாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கொடுத்த கிராம மக்கள் இறந்தவர்கள் அனைவருமே சாராயம் அருந்தியதாகவும் குடித்த சிறிது நேரத்தில் சுயநினைவின்றி மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற சம்பவம் அந்த மாநிலத்தில் அடிக்கடி நிகழ்வதாகக் கூறப்படும் நிலையில் கடந்த இரு மாதங்களில் இது மூன்றாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.