கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் தகவல்!
- IndiaGlitz, [Saturday,January 16 2021]
அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 23 பேர் உயிரிழந்து உள்ளதாகப் ப்ளூம் பெர்க் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் தற்போது நம்பிக்கை அடிப்படையில் மக்களுக்கு வழங்கி வருகின்றன. முன்னதாக இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
தற்போது நார்வேயில் ஃபைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறை 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. காரணம் உயிரிழந்தவர்கள் அனைவரும் வயதானவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நார்வேயில் உயிரிழந்த 23 பேரின் உயிரிழப்புக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்பது இன்னும் நேரடியாக நிரூபணம் செய்யப்படவில்லை. ஆனால் அதில் 13 பேருக்கு இத்தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிறிது நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் முதியவர்களுக்கு இத்தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என்று அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நார்வேயில் தற்போது வரை 30,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஃபைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதில் பலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டு கொண்டு வந்துள்ள பல நாடுகளுக்கு இத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.