ஒரே நாளில் சென்னையில் 22 பேர் உயிரிழப்பு: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா
- IndiaGlitz, [Friday,May 29 2020]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 800க்கும் அதிகமாக உள்ளது. அதில் சென்னையில் மட்டும் 500க்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகமாக இருந்தாலும் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது தமிழகத்தை பொருத்தவரை சற்று ஆறுதலாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் முறையாக இரட்டை இலக்கத்தில் அதாவது 12 பேர் கொரோனாவால் உயிரிழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர்களும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர்களும், உயிரிழந்துள்ளதாகவும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர்களும், கீழ்ப்பாக்கம் மருத்துவ 2 பேர்களும் சென்னை ஐடி ஊழியர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ஆறு மண்டலங்களில் ஆயிரத்தை கடந்து கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவை கட்டுபடுத்த சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் தினமும் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.