கொரோனாவுக்கு சென்னையில் 22 பேர் பலி: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Saturday,June 20 2020]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டுமின்றி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்ததாகவும், அதேபோல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் சென்னை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை மற்ற 3 பேர்களும், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நால்வரும் கொரோனாவால் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா மிக வேகமாக பரவுவதை அடுத்து சென்னையை விட்டு தப்பிச் சென்றால் போதும் என்று பிற மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் முயன்று கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.