5 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்: உச்சகட்டத்தை அடைந்தது அமெரிக்கா!
- IndiaGlitz, [Saturday,April 11 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் அந்நாட்டில் கொரோனாவால் பலியாகி வருவதால் சமாதி கட்ட கூட இடமும் நேரமும் இல்லாமல் கொத்து கொத்தாக பெரிய குழி தோண்டி மொத்தமாக புதைக்கும் அவலநிலையில் அமெரிக்கா உள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2108 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும், இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவால் மொத்தம் 18,586 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியான முதல் நாடு அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் கொரோனாவில் இருந்து 28,993 பேர் மீண்டு குணமாகியுள்ளனர் என்பது மட்டும் ஒரு ஆறுதலான செய்தி.
இதேபோல் இந்தியாவில் சற்றுமுன் வரை மத்திய சுகாதாரத்துறையின் தகவலின்படி மொத்தம் 7447 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 239 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 643 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.