உலக அழகிப்போட்டி இந்தியாவிலா? 27 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த கவுரவம்!
- IndiaGlitz, [Saturday,June 10 2023]
பெண்ணின் ஆற்றலையும் தனித்துவத்தையும் கொண்டாடும் வகையில் உலக அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 71 ஆவது உலக அழகிப்போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிகவும் பிரபலமான உலக அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்நிலையல் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக அழகிப்போட்டி இந்தியாவில் நடக்க இருப்பதாகவும் அதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் உலக அழகிப்போட்டிக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுலியா மோர்லி தெரிவித்துள்ளார்.
இறுதியாக கடந்த 1996 இல் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. தற்போது 27 வருடம் கழித்து மீண்டும் இந்தியாவில் உலக அழகிப்போட்டி நடைபெற இருக்கிறது. வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் இந்தப் போட்டி கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெற இருப்பதாகவும் இதில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியா சார்பாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற சினி ஷெட்டி பங்கேற்க இருக்கிறார்.
மேலும் மிஸ் வேர்ல்ட் லிமிடெட் மற்றும் பிஎம்ஐ எண்டர்டெயின்மெண்ட் இருவரும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியின்போது 130 நாடுகளைச் சேர்ந்த சாதனை பெண்மணிகள் குறித்து பரபரப்புரை செய்ய இருப்பதாகவும் ஜுலியா மோர்லி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டின் உலக அழகியாக போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அடுத்த உலக அழகிப்பட்டத்தை எந்த நாடு வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ரெய்டா ஃபாரியா (1996), ஐஸ்வர்யா ராய் (1994), டையானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மனுஷி சில்லார் (2017) ஆகியோர் உலக அழகிப்பட்டத்தை வென்ற நிலையில் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.