2020 - சென்னையில் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
உண்மையான வாசகன், வாசிப்பதை எப்பொழுதும் முடிப்பதே இல்லை! –
ஆஸ்கார் வைல்ட்.
உண்மையில் ஒரு வாசகனால் தன் வாசிப்பை எப்போதும் நிறுத்த முடிவதில்லை. தூக்கு மேடைக்குச் செல்லும் போதும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாராம் பகத்சிங். அந்த வகையில் புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் விதமாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் 1977 ஆண்டு முதல் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
சென்னை புத்தகக் கணகாட்சி பொதுவாக டிசம்பர் மாத கடைசி வாரத்தில் இருந்து தொடங்கி, பொங்கல் விழாவோடு முடிவடையும். தற்போது சென்னை ஒய். எம்.சி.ஏ. உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் 09 -ஜனவரி- 2020 முதல் 21- ஜனவரி-2020 வரை நடைபெறுகிறது. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், வரலாறு, பொது அறிவு, தொழில்நுட்பம், விளையாட்டு, உணவு, மருத்துவம் போன்ற பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் இங்குக் கிடைக்கின்றன. ஒரே நேரத்தில் தமிழ் மட்டுமல்லாது உலகளவில் பிரசித்திப் பெற்ற அனைத்து ஆங்கிலப் புத்தகங்களும் இங்குக் கிடைக்கும் என்பதால் சென்னை புத்தகக் கண்காட்சி தொடர்ந்து வாசகர்களால் வரவேற்கப்படுகிறது.
பல மாவட்டங்களில் தற்போது புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்றாலும் சென்னை புத்தகக் கண்காட்சி மிகவும் முக்கியத்துவ உடையதாகக் கருதப்படுகிறது. காரணம் 1000 த்திற்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் திறக்கப்பட்டு அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களும் இங்கு இடம்பெறுகின்றன. மேலும் புத்தகங்கள் 10 சதவீதக் கழிவு விலையில் கிடைக்கிறது என்பதும் வாசகர்களை ஈர்த்துள்ளது எனலாம். மேலும் சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஆண்டு தோறும் சிறந்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளும் வழங்கப்படுகின்றன.
குழந்தைகள்/ மாணவர்களைக் கவரும் புத்தகங்கள்
குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் விதமாகப் பல வண்ணப் புகைப்படங்களுடன் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கணிதப் பாடத்தினையும் அறிவியலையும் எளிய முறையில் புரிந்து கொள்ளும் விதமாகப் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்குப் பயன் தருகிறது என மாணவர்கள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் விதமாகக் பலர் குடும்பத்தோடு புத்தகக் கண்காட்சிக்கு வருகைத் தருகின்றனர். பல பள்ளிகள் அவர்களாகவே மாணவர்களைப் புத்தகக் கண்காட்சி அழைத்து வரும் நிகழ்வுகளும் நடை பெறுகின்றன.
வாசிப்பு
பள்ளி, கல்லூரி படிப்பினைத் தாண்டி, வாசிப்பு அறிவினைப் பரவலாக்கும் என்பதால் ஒவ்வொரு சமூகமும் வாசிப்பினைக் கொண்டாடி வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் வாசிப்பது என்பது மிகவும் குறைந்து வருகிறது. ஊடகத்தின் ஆதிக்கத்தில் இளம் தலைமுறையினர் சிக்கியுள்ள நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சி அறிவு துறையினரால் வரவேற்கப்படுகிறது. வாசிப்பதற்கு நேரமில்லை என்பதனைக் காரணம் காட்டாமல் ஒரு வாரத்திற்கு ஒரு புத்தகத்தையாவது வாசித்து விட வேண்டும் என்று புத்தகக் கண்காட்சிக்கு வருகைத் தந்த அறிஞர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பு நிகழ்ச்சிகள்
புத்தக விற்பனையைத் தாண்டி பல்வேறு அறிஞர்களின் சிறப்புரைகள் கண்காட்சி அரங்கில் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கான போட்டிகள், புத்தகங்களைக் குறித்த அறிமுக நிகழ்ச்சிகள், விவாதங்கள் போன்றவையும் இந்தப் புத்தகக் கண்காட்சியின் முக்கிய நிகழ்வுகளாகும். பல புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு வெளியிடப்படுகின்றன என்பதால் புத்தகங்களின் அறிமுக நிகழ்ச்சிகளும் அந்தந்தப் பதிப்பகத்தின் கடைகளில் நடைபெறுகின்றன. புத்தகங்கள் மட்டுமல்லாது மண் சார்ந்த உணவு வகைகளைக் கொண்ட பல்வேறு சிற்றுண்டி கடைகளும் அங்குத் திறக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகளை ருசிப்பதற்கென்றே பலர் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாங்க வேண்டிய புத்தகங்கள்
ராகுல் சாங்கிருத்யாயனின் – வால்கா முதல் கங்கை வரை, மனித சமூகம்
கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் - கோபல்லபுரத்து மக்கள்
சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்களான – , சூல், தோல், அஞ்ஞாடி, கொற்கை, காவல் கோட்டம்
மார்க்சிம் கார்க்கியின் – தாய்
கவிஞர்களை உருவாக்கும் மகாகவி பாரதியாரின் கவிதைகள், இன்குலாப் கவிதைகள்
சிறுகதைகளான – அசோகமித்ரன் சிறுகதைகள், ஜெயகாந்தன் சிறுகதைகள்
போன்றவற்றை வாசகர்கள் வாங்கிப் படிக்க வேண்டும் எனப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புத்தகத்தைக் காதலிக்கும் ஒரு சமூகம் ஒருபோதும் தோற்பத்தில்லை என்று பொதுவாக வாசிப்பு குறித்துக் கூறப்படுகிறது. ஒரு சமூகம் தன்னை எப்பொழும் அறிவு துறையில் செழிப்பாக வைத்துக்கொள்ள புத்தகங்களே சிறந்த வழி என்பதால் 43 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அனைவரும் பங்குகொண்டு வாசிப்பினைத் தொடங்குவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments