2020 – 2021 க்கான தமிழக பட்ஜெட் – எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும் துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020 -2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக கூட்டணி அரசு தனது ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. கடைசி பட்ஜெட் என்பதால் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப் பார்க்கப் பட்டது. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு பொருளதார மண்டலங்கள் அமைக்கப் படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவரங்கள் தெரிய வரும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.
நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டை 192 நிமிடங்கள் வாசித்தார். நிதியமைச்சராக இருந்து ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் இது என்பதும் சிறப்புக்குரியது. உலகம் முழுவதும் பொருளாதார மட்டத்தில் நிலவி வரும் சூழ்நிலைகள் தமிழகத்தையும் தாக்கியுள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது; தமிழகம் பொருளாதார நெருக்கடியை சிறப்பாக கையாண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தமிழக வருவாய் & செலவு
நிதி நிலை அறிக்கையின் ஆரம்பத்திலயே தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவு குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன. வருவாய் ரூ.2,19,375 கோடி எனவும் செலவீனங்கள் ரூ. 2,41,601 கோடி எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது. இதன்படி பற்றாக்குறை ரூ.22,226 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப் பட்டது. பற்றாக்குறையையும் சேர்த்து தமிழகத்தின் கடன் இந்த நிதியாண்டில் ரூ. 4,56,660 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டது.
தமிழக பொருளாதார வளர்ச்சி
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை நிதியமைச்சர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பேசினார் என்பதும் முக்கியமானது ஆகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக கணிக்கப் பட்டுள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்ற நிலையில் இருக்கிறது. 2019 – 2020 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% யாக இருந்தது எனவும் குறிப்பிட்டு பேசினார். இந்தியாவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது எனக் கூறப்பட்ட போது தமிழகம் அதைச் சிறப்பாக கையாண்டது எனவும் தெரிவித்தார்.
விவசாயத் திட்டங்கள்
முதல்வர் பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப் படும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இது சட்டமாக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப் பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரில் இது குறித்த விவரங்கள் வெளிவரும் என எதிர்ப் பார்க்கப் பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. காவிரி டெல்டா மாவட்டங்களைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பினையும் பட்ஜெட்டில் காணமுடியவில்லை.
மேலும், விவசாய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன. 7.41 லட்சம் ஏக்கர் நிலங்களில் நுண்ணீர் பாசன வசிதிகள் ஏற்படுத்தப் படும். இத்திட்டத்திற்கு ரூ. 18,44.97 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தோட்டக் கலை பயிர் சாகுபடியை அதிகரிக்கும் விதமாக 325 டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் பட உள்ளன. மேலும், 24.18 லட்சம் ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறை விரிவுபடுத்தப் படவுள்ளது.
கல்வி துறைக்கான ஒதுக்கீடு
இந்தப் பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு ரூ.55,42 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ரூ.966 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதிகப் பட்சமாக கல்வித் துறைக்கே இந்த பட்ஜெட்டில் நிதி அதிகமாக ஒதுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
விபத்து நிவாரண நிதி
சாலை விபத்துகளில் இறந்த குடும்பத்தினருக்கும், காயமடைந்து ஊனமுற்றோருக்கும் நிவராணத் தொகை வழங்குவதற்கு எனத் தனியாக திட்டம் வகுக்கப் பட இருக்கிறது. இத்திட்டத்திற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ. 250 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என்பதும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
ஸ்மாட் கார்டு திட்டம்
மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறது. அதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஸ்மார் ரேஷன் கார்டு உருவாக்கப் படும் எனவும் தமிழகத்தில் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் வாடிக்கையாளர் தங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும். மேலும், 555 நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு போன்ற சிறப்பு பொருட்களை வாங்கி கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உணவு மானியம்
இந்தப் பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு என்று ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
காவல் துறைக்கு நிதி ஒதுக்கீடு
ஒட்டு மொத்த தமிழகக் காவல் துறைக்கும் ரு.8,876.57 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
தமிழகப் பட்ஜெட்டில் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகத் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.74.08 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
தமிழக ஊரகப் பகுதிகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் ரூ.23,161 கோடி நிதி ஒதுக்கப் பட்டள்ளது என்பது வரவேற்கத் தக்கது ஆகும்.
சத்துணவுத் திட்டம்
பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்கும் விதமாக செயல்படுத்தப் பட்டு வரும் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப் படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். சத்துணவு திட்ட வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் விதமாக முதல்வர் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. பட்ஜெட்டில் காலை உணவுக்கான நிதியைப் பற்றிய எந்த விவரங்களும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
குழந்தைப் பேற்றுக்கு நிதி ஒதுக்கீடு
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரில் உருவாக்கப் பட்ட பெண்களுக்கான குழந்தைப் பேற்று நிதி திட்டத்திற்கு ரூ. 959.21 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அம்மா உணவகத் திட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவினாசி திட்டம்
பவானி ஆற்றிலிருந்து சுமார் 2000 கன அடி உபரி நீரை மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் திட்டமான அத்திக்கடவு திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக நிர்பயா பெயரில் உருவாக்கப் பட்டிருக்கம் திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா
கடந்த 2015 இல் ஆம்னி பேருந்துகளின் விபத்து குறித்து பிரச்சனை எழுந்த போது பயணிகளுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டது. அப்போதே, ஆம்னி பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் கண்காணிப்பு கேமராக்களைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்தப் பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ. 75.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விசைப் படகுகளில் தொலைத் தொடர்பு கருவிகள்
மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக 4,997 விசைப் படகுகளில் தொலைத் தொடர்பு கருவிகள் பொருத்தப் படும். இதற்காக ரூ. 18 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகம்
இந்தியப் பட்ஜெட்டில் கீழடி பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறாத நிலையில் தமிழகப் பட்ஜெட், கீழடிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்த நிதி அருங்காட்சியகம் வைக்கப் படுவதற்கு மட்டுமே என்பதும் கவனிக்கத் தக்கது. கீழடியில் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப் படுமா என்பதை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அருங்காட்சியகம் வைக்கப் படுவது இந்த நிதி அறிக்கையில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது. அருங்காட்சியகத்திற்காக பட்ஜெட்டில் இருந்து ரூ. 12.5 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் பல பேரிடர் சூழல்களை சந்திதுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மைக்காக ரூ. 1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நீதி நிர்வாகத்திற்கென ரூ.1,403.17 கோடியும், சிறைச்சாலைகளின் கட்டமைப்ப வசதிக்கு ரூ.393.74 கோடியும், தீயணைப்பு போன்ற மீட்புப் பணிகளுக்கு ரூ.4.3.68 கோடியும், மீன்வளத் துறைக்கு ரூ. 1,229.85 கோடியும் ஒதுக்கப் பட்டள்ளன.
சிறப்பம்சம்
11 மாவட்டங்களில் புது மருத்துவக் கல்லூரிகள், அதிகப் பட்சமாக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு, 11 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும், விவசாய திட்டங்களுக்கு முன்னுரிமை போன்றவை இந்தப் பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்களாக பார்க்க முடிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout