ப்ளாரான்ஸ் நைட்டிங்கேல் பிறந்து 200 ஆண்டுகளை கடந்துவிட்டது!!! இன்றும் தேவைப்படுகிறார் ஏன்???
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பெரும்நோய்த்தொற்று பரவலின் போது வெறுமனே மருத்துவர்கள் மட்டும் இருந்தால் போதாது. அந்நோய் பரவும் தன்மையை மதிப்பிடுவதற்கு, சுகாதார மேம்பாடுகளை உறுதி செய்தவற்கு, நோயை கட்டுப்படுத்துவதற்கு என அனைத்திலும் புள்ளியியல் மற்றும் கணிதவியலின் பங்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த அவசியத்தை உலகுக்கு முதன் முதலில் எடுத்துக்காட்டியவர் தான் ப்ளாரான்ஸ் நைட்டிங்கேல் எனப்படும் நவீன நர்ஸ்.
1965 இல் சர்வதேச செவிலியர் கவுன்சில் இவரது பிறந்த நாளை சிறப்பிக்க பரிந்துரை செய்தது. ஆனாலும் உலகம் முழுவதும 1974 இல் இருந்து தான் இவரது பிறந்தநாள் செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் 1820 மே 12 ஆம் தேதி இவர் பிறந்தார். இயல்பிலேயே ஏழைகளுக்கு உதவும் குணம் கொண்டவர் என்பதால் செவிலியராகப் பயிற்சி பெற்று லண்டன் மருத்துவ மனையில் பல ஆண்டுகள் தனது பணியை ஆற்றி வந்தார். செவிலி பயிற்சிக்கு முன்பு ஒரு தேர்ந்த கணிதவியல் அறிஞராகவும் நைட்டிங்கேல் விளங்கினார். அவரின் கணிதத்துறை அறிவுதான் தற்போது சுகாதார கட்டமைப்பு வசதிகளாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
1854 இல் ரஷ்யாவுக்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் கைக்கோர்த்துக் கொண்டு கரீமியன் போரில் ஈடுபட்டன. அந்த மோசமான போரின் விளைவுகளால் பல்லாயிரக் கணக்கான இராணுவ வீரர்கள் காயமடைந்து இராணுவ மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இங்கிலாந்து இராணுவ மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட நைட்டிங்கேல் 38 செவிலியர்களோடு அங்கு சென்று சேர்ந்தார். படுக்கை இல்லாமலும், கரப்பான் பூச்சிகள் அரித்துக் கொண்டும், ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவர்கள் மீது படும்படியாக நெருக்கமான சூழலில் கிடக்கும் நோயாளிகளைப் பார்த்து முதலில் மிரண்டு போனார். கழிவு நீர் அசுத்தம், சுகாதாரமற்ற சிகிச்சையினால் இன்னொரு பக்கம் காலாரா பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்நிலைமைக் கண்டு சகிக்காத அவர் போலார் என்ற நோய் பரவலைக் கணிக்கும் அட்டவணையை உருவாக்கினார்.
போலார் அட்டவணையை இராணுவ மேலதிகாரிகளிடம் விளக்கிக் காட்டி அனுமதிப் பெற்று ஒட்டு மொத்த இராணுவ மருத்துவ மனையையும் சுகாதாரமாக மாற்றியமைத்தார். இதனால் காலாரா பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. முதன் முதலில் இராணுவ வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட போலார் அட்டவணையை தற்போது கொரோனாவுக்கு எதிரான மதிப்பீடுகளுக்கும் இந்த உலகம் பயன்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போலார் அட்டவணையில் நீலம், சிவப்பு, கருப்பு என்ற மூன்று வண்ணங்கள் இருக்கும். நீலம் என்பது கட்டுப்படுத்த வேண்டிய நோய் அளவை குறிக்கும். சிவப்பு போரினால் காயமடைந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறிக்கும். கருப்பு என்பது பிற மரணங்களை குறிக்கும். இந்த விகிதத்தில் புள்ளியயல் அட்டவணைகள் பயன்படுத்த பட்டன. அடிப்படையில் கணிதவியலாளரான இவர் அதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட புள்ளியியல் அட்டவணைகளை மறுமதிப்பீடு செய்து இந்த அட்டவணையை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவ மருத்துவமனையில் இவர் மேற்கொண்ட நடவடிக்கையால் ஆண்டுதோறும் நிகழும் 40 விழுக்காடு சாவில் இருந்து 2.2 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்த அட்டவணையை இங்கிலாந்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் சுகாதார கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் அவர் பயன்படுத்தினார். மருத்துவமனைகளில் நோயாளிகள் கழிவுகளை வெளியேற்றுவதற்கு வசதியாக “பெட்பேன்” கலன்களை அறிமுகப்படுத்தினார். காற்றோட்டமான அறைகள், சுத்தமான போர்வை, உணவு இவையெல்லாம் அத்யாவசியமானவை என்ற எண்ணத்தை அதிகாரிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் விதைத்தவர் முதல் நபர் இவர்தான். மருத்துவத் துறைக்கு மட்டுமல்லாது குடியிருப்பு சுகாதாரம், பொதுச் சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்ற கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்தப் பெருமையும் இவரையே சாரும்.
பெருந்தொற்றுக்கு எதிராக அயராது பாடுபட்ட அவரையும் ஒரு நோய்த்தெற்று தாக்கியது. 1857 இல் ப்ரூசெல்லோசியஸ் என்ற நோய்த்தொற்றால் அவர் பாதிக்கப்பட்டார். இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும்போது அந்நோய்த் தொற்றுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இத்தனை பாதிப்புகளுக்கு இடையிலும் படுத்த படுக்கையாக இருந்து கொண்டு இங்கிலாந்தின் சுகாதார கட்டமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டியதைப் பற்றி பல புத்தகங்களை எழுதினார். அறிக்கைகள், துண்டுபிரசுரங்கள் என ஒரு பிரச்சாரமாக அவர் முன்னெடுத்தார். அதோடு, அறிவியல் அடிப்படையிலான ஒரு செவிலியர் பயிற்சி பள்ளியை உருவாக்க வேண்டும் எனவும் கருதினார். இவரது உழைப்பால் 1860 இல் லண்டனில் School of nursing என்ற பயிற்சி பள்ளி உருவாக்கப்பட்டது.
மருத்துவ முறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மத அமைப்புகள் அதிகாரம் செலுத்திய அந்த காலக்கட்டத்திலேயே மருத்துவத் துறை கட்டமைப்பு வசதிகளில் நவீன முறையிலான பல மாற்றங்களை புகுத்தியவர் நைட்டிங்கேல். மின்சாரம் இல்லாத காலக்கட்டத்தில் ஒரு கையில் விளக்கையும் மறு கையில் மருந்துகளையும் கொண்டு பல்லாயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய காரணத்தால் “கையில் விளக்கேந்திய காரிகை” எனவும் அழைக்கப் படுகிறார் உலகமே மருத்துவக் கட்டமைப்புக்கான மாதிரியை முதன் முதலில் இவரிடம் இருந்துதான் பெற்றது. இத்தனை உயர்வுக்கும் காரணமான அவரை செவிலியர் தினம் வாயிலாக நினைவு கூர்கிறோம். கொரோனா நேரத்தில் இவரின் பெருமை வெற்றித் திலகமாக இருக்கிறது எனலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout