ஓசியா கொடுத்தா மட்டும் சாப்பிடுறாங்க: சிக்கன் கடைக்காரர்கள் புலம்பல்
- IndiaGlitz, [Wednesday,March 18 2020]
சிக்கன் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவுவதாக கிளம்பிய வதந்தியால் தமிழகம் முழுவதும் சிக்கன் மற்றும் முட்டை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் சிக்கன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்த விலைக்கு கோழிக்கறி விற்பனை செய்தால் கூட அதை வாங்க ஆளில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோழி உற்பத்தியாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்
கோழிகளுக்கு போடப்படும் இறைச்சி அளவுக்கு கூட வருமானம் இல்லை என்று கோழி-பண்ணை வைத்திருப்பவர்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகத்தின் பல இடங்களில் சிக்கன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 ஆகியவை குறைந்த விலைக்கும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன இதனால் பொதுமக்களுக்கு சிக்கனால் கொரோனா வைரஸ் பரவாது என்ற விழிப்புணர்வு ஏற்படும் என கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் நம்புகின்றனர்
ஆனால் இலவசமாக கொடுத்தால் மட்டும் வரிசையில் நின்று வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் காசு கொடுத்து வாங்க இன்னும் தயக்கம் காட்டி வருவதால் தொடர்ந்து கோழி விற்பனை சரிந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிக்கன் கடைக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சிக்கன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பல்லடம் அருகே கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இணைந்து 200 கிலோ சில்லி சிக்கனை சமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள். அந்த சில்லி சிக்கனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டார்கள் என்றாலும், சாப்பிட்ட அனைவரும் மறுநாள் கோழிக்கறியை காசு கொடுத்து வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்