150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த காரில் ஓட்டுநர், சகபயணிகளும் மணிக்கணக்காக தூங்கிய அதிர்ச்சி சம்பவம்!!!
- IndiaGlitz, [Friday,September 18 2020]
கனடாவின் அல்பர்டா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரைப் பார்த்து போக்குவரத்துக் காவலர்கள் அதிர்ந்தே போயிருக்கின்றனர். காரணம் அந்த காரின் முதல் இருக்கைகள் இரண்டும் முழுவதுமாக சரிந்து இருக்கிறது. ஓட்டுநர் உட்பட அந்தக் காரில் இருந்த அனைத்துப் பயணிகளும் நன்றாகத் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் அந்த கார் மணிக்கு 140-150 கி.மீ வேகத்தில் சென்றதாகவும் அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர்.
இச்சம்பவத்தில் பிடிபட்ட கார் டெஸ்லா வகையைச் சேர்ந்தது என்றும் போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். டெஸ்லா வகை கார் தானாக இயங்கும் தன்மைக் கொண்டது எனப் பொதுவாக அனைவரும் நம்பி வருகின்றனர். ஆனால் இதுவரை பகுதியளவு தானாக இயங்கக்கூடிய காரை மட்டுமே டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. முழுவதும் தானாக இயங்கும் காரை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
இப்படி பகுதியளவு தானாக இயங்கக்கூடிய கார்களில் ஓட்டுநர் காரை இயக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அல்பர்டா சாலையில் 150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த டெஸ்லா காரின் ஓட்டுநர் சீட்டை நன்றாக சரிய வைத்து தூங்கி வழிந்து இருக்கிறார்.
நல்லவேளையாக சாலையில் எந்த வாகனமும் இடையூறு செய்யாமல் இருந்ததால் காரில் இருந்த அனைவரும் தற்போது உயிர்த் தப்பித்து இருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிய இளைஞர் மீது அந்நகரப் போக்குவரத்துத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.