மும்பையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 20 கடற்படை மாலுமிகள்!!!
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலுள்ள கடற்படைத் தளத்தில் 20 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாலுமிகள் கடற்படை மருத்துவமனையான ஐ.என்.எச்.எஸ் அஸ்வினியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள INS Angre கடற்படை தளமானது கரையோர தளவாடங்கள் மற்றும் நிர்வாகத்தை கவனித்து வரும் அலுவலகமாக இயங்கி வருகிறது. மேலும் மும்பையில் இயங்கும் அனைத்துக் கப்பல் சார்ந்த விஷயங்களையும் கவனித்துவரும் தலைமை அலுவலகமாகவும் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவினால் இங்கு பணியாற்றும் அலுவலர்கள், மாலுமிகள் போன்றோர் INS Angre வுக்குச் சொந்தமான விடுதிகளிலேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் 20 மாலுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த கடற்படைத் தளத்திற்கு வந்துசென்ற நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்வதில் தற்போது கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மும்பையின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 20 கடற்படை மாலுமிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது.