கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு: 20 பேர் கைது

கொரோனா தொற்றால் உயிரிழந்த சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவரின் உடலை புதைக்க அந்த பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது கண்மூடித்தனமான தாக்குதலால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் மண்டை உடைந்தது. இதனால் அவசர அவசர அவசரமாக உடன் வந்த மருத்துவரே உடலை புதைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 20 பேரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட 20 பேர்கள் மீது 188- ஊரடங்கை மீறுதல், 269- தொற்றுநோய் தடுப்பு சட்டம், 145- கலைந்து செல்லும்படி உத்தரவிட்டும் சட்டவிரோதமாக கூடுதல், 341- சிறைபிடித்தல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- வன்முறை செயலால் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 506(1)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து கொரோனால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குறித்து நெட்டிசன்கள் கருத்து கூறியபோது, ‘சமூக விலகலை‌ கடைபிடிக்காமல்‌ முண்டியடித்துக்‌ கொண்டு கடைகளில்‌ இறைச்சி வாங்க நின்ற போதும்‌, காரணமே இன்றி முககவசம்‌ இன்றி ஊர்‌ சுற்றியபோதும்‌, அருகருகே நின்று வெட்டிப்‌ பேச்சு பேசி திரிந்த போதும்‌ வராத பயம்‌ கொரோனாவால்‌ இறந்த மருத்துவர்‌ உடல்‌ மீது வருக்கிறதென்றால்‌ மக்கள் என்ன மாதிரியான புரிதலை கொண்டுள்ளனர் என்பது புரியவில்லை’ என்று தெரிவித்து வருகின்றனர்.