40 ராணுவ வீரர்கள் பலியான புல்வாமா தாக்குதல்: 2ஆம் ஆண்டு நினைவு நாள்!
- IndiaGlitz, [Sunday,February 14 2021]
இந்திய ராணுவ வீரர்கள் 40 பேரை பலிகொண்ட புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பொது மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 40 பாதுகாப்பு படையினரும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி வீரர்களின் உயிர் தியாகத்தை பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் இந்த நாடே அவர்களுக்கு கடன்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அதே மாதம் 26 ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலக்காட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது என்பதும் இந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.