கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி! தொடரும் பெற்றோர்களின் அலட்சியம்
- IndiaGlitz, [Monday,December 09 2019]
பெற்றோர்களின் அலட்சியத்தால் சுஜித் உள்பட ஒருசில குழந்தைகள் ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவங்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஒரு குழந்தையை 5 வயது வரை வளர்க்கும் வரை பெற்றோர்களின் கவனமாக இருக்க வேண்டும் என்றும் , தங்கள் கண்காணிப்பிலேயே 24 மணி நேரமும் குழந்தையை வைத்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது அறிவிப்பு வந்த போதிலும், பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக அவ்வப்போது குழந்தைகள் பலியாகி வரும் சோகமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இரண்டு வயது குழந்தை ஒன்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் என்ற பகுதியின் அருகே உள்ள சிவனாபுரம் என்ற கிராமத்தில் சாமுண்டி என்பவரின் மகன் இன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அந்த சிறுவனை காணவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள் வீட்டின் அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடினர்.
அப்போது வீட்டின் அருகே உள்ள பயன்படுத்தப்படாத கழிவுநீர் தொட்டி ஒன்றில் அந்த குழந்தை விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால் குழந்தை இறந்து பல மணி நேரம் ஆகி விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து குழந்தையின் பெற்றோர்களிடமும், அருகிலுள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.