இந்தியாவில் முதல் முறையாக நீட் தேர்வில் சென்சுரி… 2 மாணவர்கள் கூட்டாக சாதனை!!!
- IndiaGlitz, [Saturday,October 17 2020]
இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) முதன் முறையாக 720 க்கு 720 மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஒடிசமா மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லி மாணவி அகான்ஷா சிங் என இருவரும் கூட்டாக சென்சுரி அடித்தது குறித்து பலரும் மகிழ்ச்சித் தெரிவித்து உள்ளனர். இதற்குமுன் நீட் தேர்வு வரலாற்றில் எந்த மாணவரும் முழு மதிப்பெண் பெற்றதில்லை. தற்போது இரண்டு பேர் 100% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதை அடுத்து டை-பிரேக் கொள்கையின்படி சோயப் அப்தாப் சீனியர் மாணவர் என்பதால் அவருக்கு முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் இடம் பெற்றுள்ள சோயப் அப்தாம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இணைந்து படிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். மாணவி அகான்ஷா சிங் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆராய்ச்சியாளராக வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார். நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. கொரோனாவிற்கு இடையில் சில மாணவர்களால் இத்தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே மறுவாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து கடந்த 12 ஆம் தேதி மறுத்தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வுக்கான தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த விகிதம் 56.44% என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 99,610 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் 57,215 பேர் அதாவது 57.44% பேர் தகுதிப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 8.87% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.