வாயுக்கசிவால் சிகிச்சை பெற்றுவந்த 22 நோயாளிகள் உயிரிழப்பு… ம.பி. யில் நடந்த சோகம்!
- IndiaGlitz, [Wednesday,April 21 2021]
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வந்த ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிவு ஏற்பட்டு 22 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜாகிர் உசேன் மருத்துவமனையில் இன்று பிற்பகல் நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஆக்சிஜன் டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு நிரப்பும் பணி நடைபெற்று இருக்கிறது. இந்தப் பணியின்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியில் இருந்து அதிகளவு ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத ஊழியர்கள் பதற்றமடைந்து உள்ளனர்.
இந்நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த மருத்துவமனையின் 22 நோயாளிகள் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு வாயுக்கசிவைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் 150 நோயளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.