இதை செய்தால் நாளையே குழப்பம் தீரும். எடப்பாடிக்கு மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை
- IndiaGlitz, [Wednesday,June 07 2017]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பது தற்போது டிடிவி தினகரன் கையில்தான் உள்ளதாக கூறப்படுகிறது. தினகரனின் 3வது அணியில் ஏற்கனவே 27 எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். ஏற்கனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது செல்லாது என்று நாங்கள் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளோம். அந்த மனுவில் கூறியுள்ளபடி சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தேர்தல் கமிஷனுக்கு ஒரு நாலு வரி கடிதம் எழுதினால் போதும், தற்போதைய குழப்பங்கள் நீங்கிவிடும்.
தேர்தல் கமிஷன நாளையே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் செல்லாது என்று தீர்ப்பு அளித்துவிடும். அவ்வாறு தீர்ப்பு வந்துவிட்டால் சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட தினகரன் தானாகவே துணைப்பொதுச்செயலாளர் பதவியை இழந்துவிடுவார். எடப்பாடி அணியினர் இதை செய்வார்களா? என்று மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் ஓபிஎஸ் அணியுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ள முடியும் என்றும் இந்த தைரியமான முடிவை அவர் விரைந்து எடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ஆனால் தினகரனுக்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இது சாத்தியமா என்பது மிகப் பெரும் கேள்விக்குறியே.