கொரோனாவால் வியாபாரம் இல்ல… ஐஸ் கிரீமில் விஷம் கலந்து தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்!!!
- IndiaGlitz, [Thursday,September 03 2020]
கேரள மாநிலம் கண்ணூரில் கந்துவட்டி நெருக்கடி காரணமாக சொப்னா என்ற இளம் வயது பெண்மணி ஒருவர் தனது 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலத்தின் கண்ணூரை அடுத்த பையாவூரில் துணிக்கடை நடத்தி வருபவர் சொப்னா (32). இவரது கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் 11 வயது மற்றும் 3 வயதில் சொப்னாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சொப்னா கந்து வட்டிக்குப் பணத்தை வாங்கி துணிக்கடையை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக முற்றிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வட்டி செலுத்த முடியாமல் சொப்னா தவித்து வந்திருக்கிறார். மேலும் பணத்தை வட்டிக்குக் கொடுத்தவர்கள் தொடர்ந்து சொப்னாவிற்கு நெருக்கடிக் கொடுத்ததால் செய்வதறியாது தவித்த சொப்னா தனது இரண்டு மகள்களுக்கும் ஐஸ்கிரீமில் விஷத்தை வைத்துக் கொடுத்து தானும் உட்கொண்டிருக்கிறார்.
தற்போது சொப்னா மற்றும் 3 வயதில் உள்ள அவரது மகள் இருவரும் தற்கொலைக்கு முயன்றதில் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 11 வயதில் உள்ள இன்னொரு மகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கந்துவட்டி நெருக்குதல் காரணமாக இந்தத் தற்கொலைகள் நடந்தது குறித்து கேராளாவில் தற்போது பதட்டம் நிலவிவருகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா பேரிடர் பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.