இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா
- IndiaGlitz, [Thursday,April 23 2020]
உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸிற்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தும், உயிரிழந்தும் வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மனிதர்கள் மட்டுமின்றி தற்போது விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் புலி மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் இதனையடுத்து அந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் இரண்டு பூனைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு பூனைகளும் தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வகம் இதுகுறித்து கூறிய போது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவும் அபாயம் இருந்தாலும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது என்று கூறியுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவினால் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது