தண்டனை அறிவிப்புக்கு முன்னரே திடீரென மரணம் அடைந்த மும்பை வெடிகுண்டு குற்றவாளி
- IndiaGlitz, [Wednesday,June 28 2017]
கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய சம்பவம் மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம். இந்த குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி இவ்வழக்கில் முஸ்தபா டோஸா, அபு சலீம் உள்ளிட்ட 6 பேரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
இவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் நீதிமன்றம் அறிவிக்க உள்ள நிலையில், இன்று காலை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவரான முஸ்தபா டோஸ்சாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது
இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மும்பை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் முஸ்தபா சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சற்று முன்னர் அறிவித்தது. ஏற்கனவே சர்க்கரை வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த முஸ்தபாவுக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
257 பேர் வரை கொல்லப்பட்ட மும்பை வெடிகுண்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தண்டனை விபரம் அறிவிக்கப்படும் முன்னரே குற்றவாளிகளில் ஒருவர் மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.