50 வருடங்களுக்கு முன் தமிழில் பிரச்சனை இல்லாமல் வெளிவந்த 'பத்மாவதி'
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவத்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படினும், இன்னும் ஒருசில மாநிலங்களில் இந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1963ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, பாலையா, நம்பியார், காகா ராதாகிருஷ்ணன் நடிப்பில் நாராயணசாமி என்பவர் இயக்கிய 'சித்தூர் ராணி பத்மினி' என்ற திரைப்படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் காட்சிகளின் பல பாதிப்புகள் தற்போது வெளிவந்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தூர் ராணி பத்மினியின் கதை இதுதான்.
சித்தூர் சிற்றரசன் பீம்சிங் (சிவாஜி) ராணி பத்மினியை காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறார். இந்த நிலையில் ராணி பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் அலாவுதின் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் (நம்பியார்), கில்ஜியிடம் (டி.எஸ்.பாலையா) ராணியின் அழகை வர்ணிக்கின்றார். இதனால் ராணியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தூது அனுப்புகிறார். ஆனால் அதற்குள் பீம்சிங்-பத்மினி திருமணம் முடிந்துவிடுகிறது,. இதனால் ஆத்திரமடையும் கில்ஜி, சித்தூர் மீது போர் தொடுக்கின்றார். ஆனால் போரில் சகல தந்திரங்களையும் பயன்படுத்தும் பீம்சிங்கை கில்ஜியால் வெல்ல முடியவில்லை. இறுதியில் சமாதான தூது அனுப்புகிறார் அலாவுதின். தூது சென்ற இடத்தில் ராணி பத்மினியின் நடனத்தை காண விரும்புவதாக கில்ஜி கூற, விருந்தினரின் விருப்பத்தை தட்டாமல் அதே நேரத்தில் ராணியை நேரடியாக பார்க்க முடியாவண்ணம், கண்ணாடியில் மட்டும் தெரியும் வகையில் பத்மினி நடனம் ஆடுகிறார்.
இதனையடுத்து தன்னுடைய விருந்தையும் பீம்சிங், மனைவியுடன் வந்து ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க, ராணியை அழைத்து செல்லாமல் தனியார் செல்கிறார் பீம்சிங். அந்த நேரத்தில் பீம்சிங்கை கைது செய்யும் கில்ஜி, தனது அவையில் பத்மினி நடனம் ஆடினால் கணவரை விடுதலை செய்வதாக நிபந்தனை விதிக்கின்றார். நூறு பல்லக்கில் பணிப்பெண்களுடன் கில்ஜியின் அரண்மனைக்கு வரும் பத்மினி, கில்ஜியின் படையை பந்தாடிவிட்டு கணவனை மீட்டு வருகிறார்
இதனால் மேலும் ஆத்திரப்படும் அலாவுதீன், மீண்டும் சித்தூர் மீது படையெடுக்கின்றார். இந்த போரில் பீம்சிங் கொல்லப்பட, வீராவேசத்துடன் வாளெடுத்து போர் செய்யும் பத்மினி இறுதியில் தன்னைத்தானே குத்திக்கொண்டு உயிரை துறக்கின்றார்.
இன்றைய 'பத்மாவத்' கதையும், 50 வருடத்திற்கு முந்தைய 'சித்தூர் ராணி பத்மாவதி' கதையும் எந்த அளவுக்கு ஒத்து போகிறது என்பதை 'பத்மாவத்' படத்தை பார்த்தவர்கள் ஒப்பிட்டு கொள்ளவும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout