பிரபல நடிகர்கள் ஜெயிலுக்கு போன உண்மைக்கதை: வெப் தொடரில் இணையும் அஜித்-விஜய் இயக்குனர்!
- IndiaGlitz, [Wednesday,July 27 2022]
பழம் பெரும் நடிகர்கள் கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போன உண்மை கதை வெப்தொடராக வரவிருக்கும் நிலையில், இந்த தொடரில் அஜித் விஜய் பட இயக்குனர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1940 களில் பரபரப்பாக பேசப்பட்டது பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்பதும் இந்த வழக்கில் அப்போதைய சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதர் மற்றும் என்எஸ் கிருஷ்ணன் ஆகியோர் உள்பட பலர் சிறை தண்டனை அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை வழக்கு குறித்து தற்போதும் பல கட்டுரைகள் எழுதப்பட்டு வரும் நிலையில் இந்த கதையை ’தி மெட்ராஸ் மர்டர்’ என்ற பெயரில் வெப்தொடர் உருவாக்கப்படவுள்ளது. ஜீ5 தளத்தில் வெளியாகும் இந்த தொடரை சூரிய பிரகாஷ் என்பவர் எழுதி இயக்க இந்தத் தொடரின் ஷோ ரன்னராக இயக்குனர் ஏ.எல். விஜய் பணியாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த ’கிரீடம்’ விஜய் நடித்த ’தலைவா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் இந்த வெப்தொடரில் இணைந்திருப்பது பெரும் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் காலத்தில் நடந்த இந்த கொலையை அடிப்படையாக கொண்டு இந்த வெப்தொடர் தயாரிக்கப்படுவதாகவும் இதற்காக பல ஆய்வுகள் செய்யப்பட்டு இதுகுறித்து பலர் அறியாத பல மர்மங்களையும் சதிகளையும் இந்த தொடரில் வெளிப்படுத்த உள்ளதாகவும் இந்த தொடர் குறித்து இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.
மேலும் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ’தி மெட்ராஸ் மர்டர்’ என்னும் தொடர் மிகவும் சவாலானது என்றும் இதில் நான் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை எங்களால் வழங்க முடியும் என்று நம்புகிறோம் என்றும் இயக்குனர் விஜய் கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்காக 1940 ஆண்டு காலத்து சென்னை செட் போடும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.