25 இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய 9ஆம் வகுப்பு படித்த வாலிபர்!
- IndiaGlitz, [Tuesday,March 03 2020]
ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்து அதன் பின்னர் படிப்பை தொடராத 19 வயது வாலிபர் ஒருவர் தன்னை கல்லூரி மாணவர் என அறிமுகம் செய்து கொண்டு கல்லூரி மாணவிகள் உள்பட 25 இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்திய திடுக்கிடும் சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுரண்டை என்ற பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற 19 வயது வாலிபர் ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வராமல் படிப்பை நிறுத்தி விட்டார். ஆனாலும் இவர் ஒரு டிக்டாக் அடிமை என்றும் இவரது வீடியோக்கள் மிகவும் பிரபலம் என்றும், இவர் சுமார் ஆயிரம் டிக்டாக் வீடியோக்களை அப்லோடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
படு ஸ்மார்ட்டாக விதவிதமாக உடைகளை அணிந்து தன்னை கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டு கல்லூரி மாணவிகள் உள்பட 25 இளம்பெண்களை தனது காதல் வலையில் விழச் செய்து உள்ளார். அவர்களுடன் விதவிதமாக புகைப்படம் எடுப்பது , வீடியோக்களை எடுத்துக்கொண்ட பின்னர் அவற்றை மார்பிங் செய்து வெளியிட்டு வருவதை அவர் தனது தொழிலாக கொண்டுள்ளார்.
மேலும் திருமணமான பெண்களின் உடலையும் கல்லூரி மாணவிகளின் முகத்தையும் போட்டோஷாப் செய்து விதவிதமான புகைப்படங்களை அவர் டிக் டாக் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு டிக்டாக்கில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இளம் பெண்களின் வீடியோக்களை வைத்து சில பெண்களை மிரட்டி நகைகளையும் அவர் பறித்துள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கண்ணன் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவரிடம் இருந்த ஸ்மார்ட்போன்கள் உள்பட பல உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்ணனின் இந்த செயலுக்கு அவரது நண்பர்கள் இருவரும் அவரது தம்பியும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களையும் பிடித்து விசாரித்தால் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.