18 மாதக் குழந்தைக்கு கருப்பு பூஞ்சை தொற்று? அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் மியூகோர்மைசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று வெள்ளை, மஞ்சள் எனக் கலர் கலராக அச்சுறுத்த ஆரம்பித்து இருக்கிறது. இதுவரை ஒட்டுமொத்த இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் 18 மாதமே ஆன குழந்தை ஒன்றுக்கு கருப்பு பூஞ்சை தொற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகள், அதிகளவு ஸ்டீராஸ்ட்டு மருந்து எடுத்துக் கொண்டவர்கள், வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றவர்கள் என இதுபோன்றவர்களுக்கே கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று வரும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

தற்போது எந்த இணை நோயும் இல்லாத 18 மாதக் குழந்தை ஒன்றக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கும் பரிசோதனை எடுத்துக் கொள்ளலாமா எனப் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 14 நாட்களுக்குப் பின்னர்தான் இந்த நோய் ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையில் உள்ள இரத்தத்தின் அளவைத் தொடர்ந்து சரிப்பார்த்துக் கொள்வது நல்லது. மேலும் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று அறிகுறிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.